உத்தரப்பிரதேச மாநிலத்தில் மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் மாமனார் ஓடி போனதாகவும், போகும்போது அவர் தனது மனைவியின் நகை, பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷகீல் என்பவருக்கு ஆறு குழந்தைகள் மற்றும் ஒன்பது பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் தன்னுடைய மகன் அமீனுக்கு திருமணம் செய்து வைக்க ஆயிஷா என்ற பெண்ணை நிச்சயித்திருந்தார். ஆனால், ஆயிஷாவும் ஷகீலும் அடிக்கடி நெருக்கமாக இருப்பதை ஷகீலின் மனைவி பார்த்து சந்தேகம் அடைந்தார்.
இந்த நிலையில், திடீரென ஷகீல் ஆயிஷாவுடன் ஓடிப்போய்விட்டதாகவும், அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மற்றும் நகைகளையும் எடுத்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஷகீல் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, ஆயிஷாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது மகனுக்கு மணமகளாக வர வேண்டியவரை தனது கணவரே திருமணம் செய்து கொண்டதால், ஷகீலின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஷகீலின் குடும்பத்தினர் யாரும் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை என்றும், குடும்பத்தினர் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.