இத்தாலியின் வடக்கு பிரெசியா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்ததால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பயணித்த 75 வயதான வழக்கறிஞர் செர்ஜியோ ரவக்லியா மற்றும் அவரது 55 வயதான மனைவி அன்னா மரியா டி ஸ்டெபனோ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த பயங்கர விபத்தால், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் தீப்பிடித்தன. இதில், ஒரு காரின் ஓட்டுநர் படுகாயமடைந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு வாகன ஓட்டுநருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து நடந்தவுடன், தீயணைப்புப் படையினர், ஆம்புலன்ஸ்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.