கேரள நர்ஸை காப்பாற்ற வசூல் செய்யப்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

Siva

செவ்வாய், 22 ஜூலை 2025 (09:39 IST)
ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்ற நிதி வசூலிக்கப்பட்ட நிலையில், அந்த பணத்தை வசூலித்தவர் கையாடல் செய்துவிட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலத்தை சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கு மஹதி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு கிளினிக் தொடங்கினார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, மஹதி, நிமிஷாவின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சண்டையின் விளைவாக நிமிஷா, மஹதியை கொலை செய்ததாக தெரிகிறது. இந்த கொலை வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனையடுத்து, நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அவரது உறவினர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
 
நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கு தேவையான 'பிளட் மணி' தொகையை வசூலிப்பதற்காக நிதி திரட்டப்பட்டது. இந்த பணத்தை வசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த சாமுவேல் என்பவர், நிமிஷாவை காப்பாற்றுவதாகக் கூறி பலரிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளார். நிமிஷாவின் தாயாரிடம் இருந்தும் பணம் வசூலிக்க அதிகாரம் பெற்றிருந்தார். ஆனால், அவர் வசூலித்த பணத்தை தவறாக பயன்படுத்தியதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
நிமிஷாவை காப்பாற்ற வசூலிக்கப்பட்ட பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு, நிமிஷாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஏற்கனவே மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிமிஷா பிரியாவுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த நிதி கையாடல் புகார் விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்