ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் ப்ரொமோட்டர் அனில் அம்பானி மீது மோசடிக்காக சிபிஐயில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக் சபாவில் பேசிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ரிசர்வ் வங்கியின் மோசடி ஆபாய மேலாண்மை மற்றும் வகைப்படுத்தல் குறித்த வங்கியின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, ஜூன் 13 வரையிலான காலக்கட்டத்தில் மோசடியாளர்கள் என வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவித்துள்ளதாகவும், மேலும் சிபிஐயிடமும் புகார் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனமும் பட்டியல் இடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற அசல் தொகை ரூ.2,227.64 கோடியை திரும்ப செலுத்தாதது குறித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 2019ல் திவாலானது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு முறைகளின் பேரில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மீது மோசடியாளர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு காரணமாக அது திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மோசடியாளர் என பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கும் உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K