மம்தா பானர்ஜியின் உறவினர் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், "கழுத்தை அறுத்தாலும் பாஜகவில் சேர மாட்டேன்" என்று அவர் விளக்கம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள அபிஷேக் பானர்ஜி பாஜகவில் சேரவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், இதுகுறித்து அவர் பேட்டி அளித்த போது, "நான் பாஜகவில் இணைவதாக சில வதந்திகள் பரவி வருகின்றன. ஒருபோதும் அந்த தவறை செய்ய மாட்டேன். பாஜக முன் எப்போதும் நான் தலை வணங்க மாட்டேன். என் கழுத்தை அறுத்தாலும் கூட, என் மூச்சு நிற்கும் வரை மம்தா பானர்ஜி ஜிந்தாபாத்' என்ற முழக்கம் தான் என் வாயிலிருந்து வரும்" என்று தெரிவித்தார்.
மேலும், "பாஜகவின் சக்கர வியூகத்தை தொடர்ந்து உடைத்தெரிவோம். எங்கள் கட்சிக்கு எதிராக யார் பேசுகிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.