உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

Mahendran

செவ்வாய், 21 அக்டோபர் 2025 (12:53 IST)

பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 

 
உலகெங்கிலும் உள்ள மெட்ரோ ரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிடும் சர்வதேச அமைப்பான COMET நடத்திய வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் சென்னை மெட்ரோ இந்த சாதனையைப் படைத்துள்ளது.
 
2024 இல் COMET அமைப்பில் இணைந்த CMRL, ஆகஸ்ட் 2025 இல் நடந்த இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றது. இதில், உலகெங்கிலும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிறுவனங்கள் கலந்துகொண்டன. சுமார் 6500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில்களை பெற்று, அதிக பங்கேற்புடன் சென்னை மெட்ரோ நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சென்னை மெட்ரோ சேவைகளுக்கான ஒட்டுமொத்த வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண், 5-க்கு 4.3 ஆக உள்ளது.
 
சேவை தரம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் சௌகரியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான பயணிகள் பணி நிமித்தமாகவே மெட்ரோவை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் ஆவர்.
 
கட்டணம் செலுத்தும் முறைகள், கூடுதல் இட வசதி, நிலையங்களுக்கிடையேயான இணைப்பு வசதி ஆகியவற்றில் மேம்பாடுகளை பயணிகள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். பயணிகளின் கருத்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள CMRL, தொடர்ச்சியான மேம்பாடுகளை செய்ய உறுதியளித்துள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்