உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற பகுதியில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், இந்த கும்பமேளா நிகழ்ச்சியை கொண்டாட முதல் நாளில் மட்டும் ஒன்றரை கோடி பக்தர்கள் வருகை தந்ததாகவும், திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்துக்களின் புனித நாளாகக் கருதப்படும் மகா கும்பமேளா நிகழ்ச்சி ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஆனால், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறையே மகா கும்பமேளா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று முதல் தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், ஒரு ஆண்டுக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆன்மீக பெரியவர்கள், பொதுமக்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 83 லட்சம் பேர் கங்கை நதியில் புனித நீராடியதாகவும், நேற்று மட்டும் ஒன்றரை கோடி பேர் புனித நீராடியதாகவும் கூறப்படுகிறது.
பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவின் முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதாக ஆன்மீக பெரியவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கும்பமேளாவுக்கு மேலும் 40 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.