காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்புகிறதா பாஜக??? ப.சிதம்பரம் கைது குறித்து குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (11:10 IST)
காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளதாக கார்த்திக் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து ப.சிதம்பரம் கைது குறித்து பல எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கார்த்திக் சிதம்பரம் அளித்த பேட்டியில், இது ஒரு கீழ் தரமான செயல், அரசியல் பழிவாங்கலுக்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை திசை திருப்பவே இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜியை, தன்னை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது தான் பார்த்தாகவும், அதற்கு முன் அவர்களை பார்த்ததே இல்லை எனவும் கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள், சுமார் 3 கோடியே பத்து லட்சம் ரூபாய்க்கு ஐ.என்.எக்ஸ் மீடியாவின் முதலீட்டை பெற்றதாகவும், அதன் பின்னர் இந்த பணம் வேறு முறையில் அந்நிறுவனத்திற்கு திருப்பப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டதை குறித்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்ட செய்தி குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்