மெட்ரோ ரயில் நிலையங்களில் CMRL பயண அட்டை (Travel Card) பயன்பாட்டிலிருந்து தேசியபொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC Card - சிங்கார சென்னை அட்டை) மாற்றப்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் பயணிக்க CMRL பயணஅட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC Card -சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது.
01.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.
பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்தி கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத்தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்கு பதிலாக, பயணிகள் தேசியபொது போக்குவரத்து அட்டையை (NCMC) எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுபோக்குவரத்து அட்டைக்கு மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.