மழை பெய்யாததால் புதைத்த பிணங்களை தோண்டி எடுத்த கிராம மக்கள்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva
புதன், 19 ஜூன் 2024 (16:39 IST)
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மழை பெய்யாததால் புதைத்த பிணங்களை தோண்டி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி என்ற மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் வறண்ட சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து மழை பெய்வதற்காக அந்த கிராமங்களில் புதைத்த சடலங்களை தோண்டி எடுத்து அதன் பின் எரித்து மழைக்கான கடவுளை அழைத்து வினோத வேண்டுதல் செய்தனர்.

பொதுவாக  மழை பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, நிர்வாணமாக இளம் பெண்ணை ஊரைச் சுற்றி வர வைப்பது போன்ற மூடப்பழக்கங்கள் இன்னும் சில கிராமத்தில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹவேரி கிராமத்தில் மழை கடவுளின் ஆசி வேண்டும் என்பதற்காக இறந்தவர்களின் உடலை தோண்டி எடுத்து அதை எரித்ததாக அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் கூறியுள்ளார். இப்போது மட்டுமில்லை இதற்கு முன்னரும் இதே போல் சடலங்களை தோண்டி எரித்து மழைக்கான வேண்டுதல் செய்திருப்பதாகவும் அவ்வாறு வேண்டுதல் செய்தால் மழை வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

சில குடும்பங்களின் உறவினர்கள் இறந்தவர்களின் பிணத்தை தோண்டி எடுக்க அனுமதிப்பதில்லை என்றாலும் கிராமத்தினர்கள் அவர்களிடம் பேசி சம்மதிக்க வைப்பதாகவும் அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்