தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஜூன் 22ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது எனவும் தமிழகத்தில் இன்று (ஜூன் 18) முதல் ஜூன் 21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. வரும் ஜூன் 22ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.