மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கோரி சட்ட பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் என கர்நாடகா முதல்வர் தகவல்.
தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தது.
இதனைத்தொடர்ந்து மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சட்ட விரோதமானது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது சட்ட விரோதமானது. பிற மாநில உரிமைகளில் தலையிடுவது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தெரிவித்தார்.
இப்போது மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.