முதல்வர் அறிவிப்புக்கு பின் மாரடைப்பு பயம் அதிகரிப்பு.. மருத்துவ பரிசோதனைக்கு குவியும் பொதுமக்கள்..!

Siva

வியாழன், 10 ஜூலை 2025 (08:21 IST)
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சமீபத்தில், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும் மாரடைப்பு அதிகரிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறியது அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதனால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை செய்ய குவிந்து வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் வழக்கத்தை விட அதிகமாக பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக வருகை தருவதாகவும், குறிப்பாக இதய நோய் சம்பந்தப்பட்ட பரிசோதனைக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவப் பரிசோதனை செய்ய வரும் பொதுமக்களின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், முதல்வரின் கருத்துக்கு பின்னரே மக்கள் அச்சப்பட்டு இந்த பரிசோதனைகளை செய்ய வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ஆனால், சித்தராமையா கூறிய கருத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மறுப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், முதல்வரின் இந்தக் கருத்து காரணமாக தற்போது கர்நாடக மாநிலத்தில் தேவையற்ற பீதி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
பொதுமக்கள் தங்களுடைய வழக்கமான பரிசோதனைகளை செய்தால் போதும் என்றும், வாழ்க்கை முறையை சற்றே மாற்றி மன அழுத்தத்திலிருந்து விடுபட்டாலே மாரடைப்பு நோயிலிருந்து தப்பித்துவிடலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்