காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

Prasanth K

ஞாயிறு, 6 ஜூலை 2025 (09:20 IST)

கர்நாடகாவில் காதலிக்க மறுத்த ஆசிரியையை இளைஞன் ஒருவன் குத்திக் கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் பாண்டவபுராவில் உள்ள அலிகெரேயை சேர்ந்தவர் 36 வயதான பூர்ணிமா என்ற பெண். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் மைசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருக்கு அபிஷேக் என்ற 26 வயது இளைஞர் பழக்கமாகியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பூர்ணிமாவை காதலிப்பதாக அபிஷேக் கூறியுள்ளார்.

 

ஆனால் அபிஷேக் தன்னை விட வயது குறைவானவர் என்பதால் பூர்ணிமா அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் அடிக்கடி பூர்ணிமாவிடம் தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் தொல்லைக் கொடுத்து வந்த அபிஷேக், சம்பவத்தன்று பூர்ணிமாவிடம் தனியாக பேச வேண்டும் என கூறி பூங்கா ஒன்றிற்கு வர சொல்லியுள்ளார்.

 

அங்கும் காதலை ஏற்காதது குறித்து இருவரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபிஷேக், பூர்ணிமாவை கத்தியால் குத்தியுள்ளார். அதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பூர்ணிமாவுக்கு, இரக்கமே இல்லாமல் மஞ்சள் கயிறை எடுத்து தாலி கட்டிய அபிஷேக், அதை செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். பின்னர் பூர்ணிமாவை அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்துவிட்டு தப்பி தலைமறைவாகியுள்ளார். உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்த பூர்ணிமா சிகிச்சை பலனின்றி பலியானார்.

 

இதுகுறித்து அறிந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அபிஷேக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்