150 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
அறிவியல் வளர்ச்சி காரணமாக தகவல் தொழில்நுட்பம், ஒளிபரப்பு, தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்தும் விண்ணில் பல செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் முன்னிலையில் உள்ள நிலையில் பல நாடுகள் தங்களது செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோவை நாடுகின்றன.
சமீபத்தில் சிறிய ரக செயற்கைக்கோள்களை தொலை தூரங்களில் நிலைநிறுத்த எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டை இந்தியா ஏவியது. தற்போது சிறிய ரக செயற்கைக்கோள்களை குறைந்த தூரத்தில் நிலைநிறுத்தும் வகையில் முதன்முறையாக ஹைபிரிட் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 3,500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது முதலாவது ஹைபிரிட் ராக்கெட். மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிப்புலம் கிராமத்தில் இருந்து இயக்கப்பட்ட இந்த ராக்கெட்டில் 150 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன.