கேரளாவை சேர்ந்த பினில் பாபு என்ற 26 வயது இளைஞர் போலந்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றப்பட்டு, பின்னர் ரஷ்ய படையில் கூலிப்படையாக சேர்க்கப்பட்டு, உக்ரைன் போரில் உயிரிழந்ததாக கூறப்படுகிறர்க்ய். அவரது மரணத்தை வெளியுறவு துறை கடந்த ஜனவரியில் உறுதி செய்தபோதும், அவரது சடலம் மற்றும் இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவரது குடும்பம் 10 மாதங்களாக தவித்து வருகிறது.
பினில் பாபுவின் மனைவி ஜாய்ஸ், தனது ஒன்றரை வயது மகனின் ஆதார் அட்டையில் உள்ள பிழையை சரிசெய்ய முயற்சிக்கும்போது இந்த சிக்கலை சந்தித்துள்ளார். திருத்தம் செய்ய கணவரின் இறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுவதால், இந்த பணி சாத்தியமற்றதாக மாறியுள்ளது.
ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம், பினிலின் தந்தையிடமிருந்து டிஎன்ஏ மாதிரியை சேகரித்தது. ஆனால், முடிவுகள் இன்னும் வரவில்லை. ஆரம்பத்தில் 'கொல்லப்பட்டார்' என கூறப்பட்ட பினில், இப்போது 'காணவில்லை' என பட்டியலிடப்பட்டுள்ளார். ரஷ்ய ராணுவ நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.