தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
"திமுகவின் வாக்குறுதிகள் வெறும் உருட்டுதான்!" என்று குற்றம்சாட்டிய அவர், 2021 சட்டமன்ற தேர்தலின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட 525 வாக்குறுதிகளில், 10 விழுக்காட்டை கூட நிறைவேற்றவில்லை என தெரிவித்தார். மேலும், "அவர் தமிழக மக்கள் அனைவருக்கும் வெறும் அல்வாதான் கொடுத்துள்ளார்," என்று கிண்டல் செய்தார்.
ஈபிஎஸ் தனது விமர்சனத்தை வெளிப்படுத்த, ஒரு நூதன வழியைக் கையாண்டார். அவர் கையில், "திமுக உருட்டு கடை அல்வா" என்று அச்சிடப்பட்ட பாக்கெட்டுகளை காண்பித்தார். இந்த பொட்டலங்கள் உள்ளே அல்வா இன்றி, காலியாக இருந்தன. காலி அல்வா பாக்கெட்டுகளை காண்பித்து, திமுகவின் வாக்குறுதிகள் அர்த்தமற்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.