ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த பல வழிகளில் முயற்சித்து வரும் ட்ரம்ப் அதன் ஒரு பகுதியாக இருநாட்டு அதிபர்களையும் சந்திக்க வைக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தொடங்கிய போர் 4 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில் அனைத்து போர் நிறுத்த முயற்சிகளும் செல்லாக்காசாகி விட்டன. அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், தனது முதல் வேலையே இந்த போரை நிறுத்துவதுதான் என சூளுரைத்து களம் இறங்கினார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் - புதின் இடையே அலாஸ்காவில் நடந்த சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஸ்வானமாகி போனது. இந்நிலையில் இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் பேசுகிறார். அதற்கு முன்பாக ஹாட்லைனில் புதினுக்கும் கால் செய்து பேசியுள்ளார் ட்ரம்ப்.
போர் நிறுத்தம் தொடர்பாக இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசி வரும் ட்ரம்ப், இருவரையுமே சந்திக்க வைத்து பேச வைக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து பேசினால் மட்டுமே இந்த பிரச்சினையில் முழுமனதான முடிவை எட்ட முடியும் என்று ட்ரம்ப் நம்பும் நிலையில் இது சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K