பாசிசம் நம்மை கடுமையாக தாக்கும் - மோடிக்கு திரைக்கலைஞர்கள் !

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (10:09 IST)
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மீண்டும் ஒருமுறை பாஜகவுக்கு வாய்ப்பளித்தால் அது மக்களைக் கடுமையாக பாதிக்கும் என திரைக்கலைஞர்கள் ஒன்றினைந்து கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்குக் குறைவானக் காலமே உள்ளது. தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தால் சூடுபிடித்துள்ளது. தேசிய அளவில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கு இடையில் வெற்றி பெறுவதில் கடுமையானப் போட்டி நிலவுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் ஆட்சியில் கொல்லப்பட்ட கலைஞர்கள் மற்றும் பாஜக முன்னெடுக்கும் பசு காவலர்கள் அரசியல் போன்றவை பொதுமக்கள் மற்றும் சிற்பான்மையினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இந்திய அளவில் உள்ள கலைஞர்கள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இயக்குனர் வெற்றிமாறன், ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி போன்றோரும் இணைந்துள்ளனர்.

அந்த அறிக்கையின் சாராம்சம்:-
கலாச்சாரம் மற்றும் புவியியல் ரீதியாய் நாம் வேறுபட்டிருந்தாலும், எப்போதும் ஒற்றுமையாய் இருந்து வந்துள்ளோம். அந்த ஒற்றுமைக்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் புத்திசாலித்தனமான முடிவெடுக்காவிட்டால் பாசிசம் நம்மை கடுமையாக தாக்கும் ஆபத்து உள்ளது.

பா.ஜ.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பரிதாபமாக தோற்றுள்ளது. இதனால் பசு பாதுகாப்பு வன்முறைகளையும் கும்பல் மனோபாவங்களையும் வளர்த்து நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

லேசான எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள் கூட தேசத் துரோகிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். தேசபத்தியை ட்ரம்ப் கார்டாக பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்கின்றனர். ராணுவ நடவடிக்கைகளைக் கூட தங்கள் தேர்தல் உத்தியாக பயன்படுத்தி, நாட்டை போரில் ஈடுபடுத்தும் சூழலை உருவாக்கும் அளவிற்கு இது வளர்ந்துள்ளது. இவர்களை அஞ்சாமல் எதிர்த்து நின்றதற்காக கொல்லப்பட்ட ஊடக நண்பர்களை மறந்துவிட வேண்டாம்.

இன்னொரு முறை பா.ஜ.க விற்கு வாய்ப்பு கொடுப்பது ஆபத்தான தவறாகிவிடும். அது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாகும். உங்களால் முடிந்த அத்தனையையும் செய்து இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் தொடர்வதை தடுத்து, நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும், பேச்சு எழுத்து சுதந்திரத்தை உறுதி செய்யும், தணிக்கைகள் அடக்குமுறைகளுக்கு எதிரான ஒரு அரசை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதுவே நமது கடைசி வாய்ப்பு.

அறிக்கையின் தமிழ்ப்பகுதி ஊடகவியலாளர் ஜெயச்சந்திர ஹாஸ்மியின் முகநூல் பக்கத்தில் இருந்து

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்