தேர்வில் தன்னை விட அதிக மதிப்பெண் எடுத்த தோழிக்கு மாணவி ஒருவர் பொறாமையில் விஷம் வைத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சத்னா நகரில் தனியார் பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது தோழி தன்னை விட தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததால் பொறாமையில் தோழியின் தண்ணீர் பாட்டிலில் கொசு விரட்டும் மருந்தினை கலந்துள்ளார்.
தண்ணீரில் கொசு மருந்து கலந்திருப்பதை அறியாத அந்த மாணவி அதனை குடித்துள்ளார். இதனால் அந்த மாணவிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாணவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அந்த மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அந்த பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து நடத்திய விசாரணையில் அந்த மாணவியின் தோழி தண்ணீர் பாட்டிலில் கொசு மருந்தினை கலந்து அதனை மற்றொரு மாணவியின் பையில் மறைத்த வைத்த காட்சி பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசாரின் விசாரணைக்கு பயந்த அந்த குற்றவாளியான மாணவி தனது வீட்டில் வைத்து கொசு மருந்தினை அருந்தியுள்ளார். உடனடியாக அந்த மாணவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.