பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றார். புதிய அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்.
இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், புதிய அரசின் முதல் முடிவாக, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நாடு முழுவதும் மேலும் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி அளிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.