பில்கிஸ் பானு வழக்கு.! சரணடைய குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் இல்லை.! உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

Senthil Velan
வெள்ளி, 19 ஜனவரி 2024 (16:09 IST)
பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கேட்ட குற்றவாளிகளின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  
 
2022-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இந்த கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது. குற்றவாளிகள் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கீஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர்களின் விடுதலையை ரத்து செய்யக்கோரி பலர் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்தனர்.
 
பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் 2002 கலவரத்தின் போது நிகழ்த்தப்பட்ட  குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 கைதிகளை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.  மேலும் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்குள் சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதனை அடுத்து,  குற்றவாளிகள் 10 பேர் தரப்பில், சரணடைய மேலும் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று விசாரிக்கப்பட்ட நிலையில்,  மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம்,  ஜனவரி 8ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி இரண்டு வாரத்திற்குள் சரணடைய ஆணையிட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்