டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடி வருபவர்களுக்கும், சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களுக்கும் இடையே நடந்த வன்முறையில் 11 பேர் வரை இது வரை பலியாகி உள்ளதாக திடுக்கிடும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 50 பேர் வரை காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் டெல்லியில் வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் டெல்லியில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்தும் நோக்கில் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்துள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது
டெல்லியில் கலவரக்காரர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறானவை என்று காவல்துறை டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள் என்றும் இனிமேல் கலவரம், வன்முறை எதுவும் நடக்காமல் பார்த்து கொள்ள காவல்துறை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கலவரத்தில் தலைமை காவலர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் 11 காவலர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது