பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜோகிபூர் மலவான் கிராமத்தில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சிரவன் குமார், கிராம மக்களால் தாக்கப்பட்டார். இதில் அமைச்சரின் பாதுகாவலர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் கிராமமே பதட்டமான சூழலுக்கு மாறியது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, அமைச்சர் சிரவன் குமார் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடன் கிராமத்திற்கு சென்றார். அவர்கள் அங்கு சென்று அரை மணி நேரம் கழித்து, மேலும் சில கிராம மக்கள் அஞ்சலி செலுத்த வந்தனர்.
அஞ்சலி செலுத்தும் நேரத்தில், திடீரென கோபமடைந்த மக்கள், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரைத் தாக்க தொடங்கினர். நிலைமையை கண்ட இரு அரசியல் தலைவர்களும் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஓடி தப்பித்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பெரிய காயங்கள் இன்றி தப்பினாலும், பல பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அமைச்சர் சிரவன் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாளந்தாவில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளையும் உடன் அழைத்து சென்றிருந்தேன். குடும்பத்தினரை சந்தித்துவிட்டு நான் கிளம்ப இருந்தபோது, சில மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஒரு சிலர் வேண்டுமென்றே இந்த விவகாரத்தை ஒரு பெரிய பிரச்சினையாக்க நினைத்தனர். ஆனால், நான் அங்கிருந்து அமைதியாக கிளம்பிவிட்டேன்" என்று தெரிவித்தார்.
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும், காவல் நிலையங்களில் இருந்து அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு தீவிரமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.