திகார் சிறையில் ப. சிதம்பரம் ... நினைத்ததை சாதித்ததா பாஜக ?

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (19:59 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ, காவல் முடிந்த பின்னர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவர் மீதான அமலாக்கத்துறை வழக்கில் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதம் செய்தார். ஆனால் இதற்கு சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத் துறை விசாரணை காவலுக்கு செல்ல ப.சிதம்பரம் தயார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க  உத்தரவிட்டார்.
 
இதனை அடுத்து ப.சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள 7ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டார். இதே அறையில் தான் கடந்த ஆண்டு கார்த்திக் சிதம்பரம் ஒரு வழக்கிற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் அடைக்கப்பட்ட 7ஆம் எண் அறையில் மேற்கத்திய பாணியிலான கழிப்பறை வசதி உண்டு என்பதும் போதிய காவலர்கள் நிறுத்தப்ப ட்டிருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சிறையில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சிதம்பரம் எழுந்திருக்க வேண்டும் என்றும் காலை சிற்றுண்டிக்கு பின் அவர் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர் என்றும், மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் அவருக்கு மதிய உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் ப.சிதம்பரம் தொலைக்காட்சி பார்க்க விரும்பினால் சிறையில் உள்ள நூலகத்துக்குச் சென்று தொலைக்காட்சியை பார்க்கலாம் என்றும் இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் அவருக்கு இரவு உணவு வழங்கப்படும் என்றும் ஒன்பது மணிக்குள் அவர் தனது சிறை அறைக்குச் செல்ல வேண்டும் என்றும் சிறை விதிகள் கூறுகின்றன
 
டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றம், ப. சிதம்பரத்தை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டதால், அவரை போலீஸார் திகார் சிறைக்கு கொண்டுசென்றனர்.  பின்னர் அவருக்கு மருத்துவ சோதனைகள், செய்யப்பட்டு, அமலாக்கத்துறை வழக்கு கைதிகள் அடைக்கபட்டுள்ள 7ஆம் எண் சிறையில் அடைத்தனர்.முன்னதாக நீதிமன்றம அவரது மருந்துகள் மற்றும் அனுமதி அளித்துள்ளது. இந்த சிறையில் சிதம்பரத்திற்கு தனி  அறையும், மேற்கத்திய  கழிவறையும்  அளித்துள்ளதாக  அதிகாரிகள்  தெரிவித்தனர்.
 
திகார் சிறையில் சிறை நாட்களை ஆரம்பித்த சிதம்பரம், குறைவான உணவையே சாப்பிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் நுட்பமான சில சட்ட நுணுக்கங்களை உபயோகித்து இந்தப் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அதனால் அவரைவிட நுட்பமானவர்கள் இந்த வழக்கை பல ஆண்டுகள் கழித்து தூசிதட்டி இப்போது சிதம்பரத்தை சிறையில் தள்ளியுள்ளனர்.
 
ஏற்கனவே இந்த அமலாக்கத்துறை வழக்குகளில் சிறைக்குச் சென்றவர்களில் எவரும், நாட்டில் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிதம்பரத்தின் மீதான ஒட்டுமொத்த பார்வையும் இன்று தலைகீழாக மாறியுள்ளது. அவரே ஒரு வக்கீலாக இருந்தும் கூட இந்தளவுக்கு ஒரு சோதனைக் காலத்தை அவர் எதிர்பார்க்காதது தான். இன்னும் சொல்லப்போனால் இந்த வழக்குக்கு, உச்ச நீதிமன்றத்தில் வாதாட, மிக பலமான தொகைதான் சம்பளமாக பிரபல வழக்கறிஞருக்கு செலுத்தப்பட்டிருக்குமென ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அந்த தொகையை கொடுப்பதற்காக செல்வந்தராக அவர் இருப்பதனால்தானே அவர் இந்தனை தொகையை வக்கீல் பீஸாக கொடுத்திருக்க முடியும்?
 
சிதம்பரம் கைது என்பது ஒரு பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூக்குரல் இட்டாலும் கூட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாகவே நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். சிதம்பரத்தின் கைது என்பது அரசியல் சதுரங்கத்தில் பாஜவுக்கு வெற்றியா ? காங்கிரஸின் இமேஜுக்கு சரிவா? என்பதைவிட இனிவரும் காலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காவது சிதம்பரத்தின் மீதான வழக்கும் , அவருக்கான திகார் சிறையும் இனி ஊழல் செய்யக்கூடாது  என்பதற்கான  முன்மாதிரியாக  இருக்கும் என்றே பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்