மும்பையில் 32 வயதான நபர் ஒருவர் ஏற்கனவே 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு 6-வது திருமணம் செய்ய முயற்சித்தபோது சிக்கியுள்ளார்.
மும்பையை சேர்ந்த ஒரு நபர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க நல்ல மாப்பிள்ளையை தேடி வந்துள்ளார். அப்போது அவரிடம் அறிமுகமாகிய 32 வயதான ஒரு நபர் தான் ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய வேலையில் உள்ளதாகவும், டிராவல் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த பெண்ணின் தந்தை, தனது மகளுக்கு அந்த நபரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் டிசம்பர் மாதம் நிச்சயக்கப்பட்டிருந்தது. ஆனால் போதிய பணம் இல்லாததால் அவர்களுடைய திருமணம் தள்ளிப்போனது.
அந்த நேரத்தில் பெண் வீட்டாருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை நல்லவரல்ல. ஏற்கனவே 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். எனவே உங்களுடைய பெண்ணுடைய வாழ்க்கையை சீரழித்து விடாதீர்கள் என கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் கேள்வி கேட்டனர். ஆனால் அவர் அப்படி எதுவும் நடக்கவில்லை என மறுத்துள்ளார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்ணின் வீட்டிற்கு அந்த மாப்பிள்ளையால் ஏமாற்றப்பட்ட 5 பெண்களும் வந்து நடந்ததை கூறியுள்ளனர்.
இதனையடுத்து பெண் வீட்டார், அந்த மாப்பிள்ளை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.