இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தினர் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்களுக்குப் போலி ஆதார் அட்டைகளை தயாரித்து வந்த இரண்டு கும்பல்களை சேர்ந்த 8 பேரை உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இந்த கும்பல்கள் பிடிபட்டன. இந்த கும்பல்கள், நவீன மின்னணு முறைகளை பயன்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளன. இந்த மோசடி, ஒன்பது மாநிலங்களில் மிகத் தீவிரமாக நடந்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த மோசடிக் கும்பல், ஒரு போலி ஆதார் அட்டைக்கு ரூ.2,000 முதல் ரூ.40,000 வரை கட்டணம் வசூலித்துள்ளது. இந்த போலி ஆதார் அட்டைகள், பின்னர் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் பிற இந்திய ஆவணங்களை பெறவும், அரசின் நலத்திட்டங்களை பெறவும் உதவியுள்ளன. இது நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.