கேரளாவின் பெரும்பாவூர் பகுதியில் உள்ள கடையில் போலியான ஆதார் அட்டைகள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாறு வேடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரும்பாவூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஷாப்பிங் வளாகத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வந்த மொபைல் போன் கடையில், போலி ஆதார் அட்டைகள் அச்சடித்து வழங்கப்படுவதை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திடீரென போலீசார் அந்த கடையை முற்றுகையிட்டனர். அப்போது, ஏராளமான போலி ஆதார் அட்டைகள், லேப்டாப்புகள், பிரிண்டர்கள், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தை நடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பல போலி ஆதார் அட்டைகளை பிரிண்ட் செய்து வழங்கியுள்ளார் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து போலி ஆதார் அட்டைகள் பெற்றவர்கள் உடனடியாக அவற்றை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆதார் அட்டைகளை பயன்படுத்தினால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.