திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி, தேரை வடம்பிடித்து இழுத்து, "அரோகரா" என்ற பக்தி முழக்கமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
ஆவணி திருவிழாவின் முதல் நிகழ்வாக, அதிகாலை 7 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து, முருகப்பெருமான் தெய்வானை மற்றும் வள்ளி சமேதராக குமரவிடங்க பெருமான் தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
பக்தர்கள் நேற்று மாலை முதலே திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். அவர்களின் பக்தி வெள்ளத்தில் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆவணி திருவிழா, தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வுகளுடன் நடைபெற்று வருகிறது.