மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்த 19 பேர், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இந்திய அடையாள ஆவணங்கள் இருந்தபோதிலும், 'சட்டவிரோத வங்கதேசத்தவர்கள்' என்று முத்திரையிடப்பட்டு ஒடிசாவில் உள்ள ஒரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "தங்கள் மொழி காரணமாகவே தாங்கள் குறிவைக்கப்பட்டதாக" அவர்களில் ஒருவர் கூறியிருப்பது இந்த சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
இந்த தடுப்புக்காவல் விவகாரம் அரசியல் ரீதியாகப்பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத ரீதியாக வங்க மொழி பேசுபவர்களை பாஜக குறிவைப்பதாக கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடியாக, பாஜகவின் சுவேந்து அதிகாரி, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை 'ஊடுருவியவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், முகாமில் வைக்கப்பட்டுள்ள 19 பேரும் ஏற்கனவே இந்திய குடிமக்கள் தான் என சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சுக்ரபாத் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அரசியல் மோதல் காரணமாக, இந்த 19 பேரும் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.