தமிழக வெற்றிக் கழகம் அதன் முதல் தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். முதல் தேர்தலிலேயே வலுவான தாக்கத்தை ஏற்படுத்த அக்கட்சி முனைப்புக் காட்டி வருகிறது. இந்த நிலையில், அக்கட்சிக்கு தேவையான சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
நடிகர் விஜய், கட்சி தொடங்குவதற்கு முன்பாக, அவரது 'விஜய் மக்கள் இயக்கம்', 2022 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது பல இடங்களில் ஆட்டோ சின்னத்தை பெற்றனர். இதனால், சட்டமன்ற தேர்தலிலும் அதே ஆட்டோ சின்னத்தில் போட்டியிட அக்கட்சி திட்டமிட்டது.
ஆனால், தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் ஆட்டோ சின்னம் இல்லை. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆட்டோ சின்னம், கேரளா காங்கிரஸ் (எம்) என்ற கட்சிக்கு மாநில அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டுவிட்டது. ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு ஒதுக்கப்படும் சின்னம், வேறு மாநிலத்தில் உள்ள வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்படாது” என்று விளக்கமளித்துள்ளார்.