இலவச ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன், உதவித்தொகை..! – பாஜகவின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிவிப்புகள்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (09:23 IST)
திரிபுரா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜக கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் பாஜக கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில் மாணிக் சாஹா முதல்வராக உள்ளார். இந்த ஆண்டுடன் திரிபுராவில் பாஜக ஆட்சி முடிவடையும் நிலையில் 60 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

திரிபுராவில் தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த பாஜக தேர்தல் கூட்டத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா திரிபுரா தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையின்படி, திரிபுராவில் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசம். திரிபுராவில் உள்ள 50 ஆயிரம் இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள். நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை. மாநிலம் முழுவதும் ரூ.5க்கு உணவு வழங்கும் திட்டம் என பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மாநில அரசுகள் இலவசங்கள் வழங்குவதால் நாட்டின் முன்னேற்றம், கட்டமைப்பு பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், தற்போது பாஜக பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்