பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஆகஸ்ட் 1 முதல் அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில மாதங்களில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
"ஆகஸ்ட் 1 முதல் அனைத்து நுகர்வோருக்கும் 125 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 1.67 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்" என்றும் நிதீஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், "அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சார வசதி நிறுவ முடிவு எடுத்துள்ளதாகவும், ஏழை குடும்பங்களின் வீடுகளில் கூட சூரிய மின்சார வசதி அமைக்கப்படும். அதற்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.