மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக அரசு பயப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, மக்களிடையே பிரிவு நிலையை ஏற்படுத்தும் வேலையைத்தான் பாஜக செய்கிறது என்றும், விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்று ராகுல் காந்தி கூறுவதை பாஜக ஏற்றுக் கொள்வதில்லை என்றும் கூறினார்.
மக்கள் தொகை கணக்கெடுத்தால் தான் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பிரிவினர் வேலை வாய்ப்புகள் பெறலாம் என அரசியல் சட்டத்தில் விதிகள் உள்ளது. கார்ப்பரேட் தலைவர்களில் எத்தனை பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்? ஊடகத்தில் பழங்குடியினர் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக பயப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலையில் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் கணக்கெடுப்பு நடத்தவில்லை.
ஆனால் காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ளது. அதேபோல் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன் என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார்.