உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கல்வி நிதியாக ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்று மத்திய அரசு முன்னரே அறிவித்திருந்தது. இந்தச் சூழலில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டிற்கு, கடந்த நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், 2024-25 நிதியாண்டில் மொத்தம் ரூ.34,000 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காத கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மத்திய கல்வி அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.