உத்தர பிரதேச பள்ளியில் தலித் மாணவர்களுக்கு தனி வரிசை – மாயாவதி கண்டனம்

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (20:12 IST)
உத்தர பிரதேச கிராமம் ஒன்றில் தலித் மாணவர்களை மட்டும் தனியே பிரித்து வைக்கும் நடைமுறை இருந்து வருவதை கண்டித்துள்ளார் பகுஜன் சமா கட்சி தலைவர் மாயாவதி.

சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உணவின்போது சப்பாத்திக்கு உப்பு வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. அதேபோல தற்போது தலித் மாணவர்களை தனியே அமர வைத்து உணவு வழங்கும் செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மதிய உணவின்போது தலித் மாணவர்களை பிரித்து தனி வரிசையில் உட்கார வைப்பதாகவும், அவர்கள் உண்பதற்கான தட்டுகளை வீட்டிலிருந்தே எடுத்து வர சொல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்த உயரதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்க வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி சென்றுள்ளனர். இருந்தாலும் மாணவர்கள் தங்களுக்குள் சாதிய பாகுபாடுகள் பார்ப்பதாகவும், பள்ளிப்பாடத்தை தாண்டி வீட்டில் உள்ளோர் அவர்களுக்கு சமத்துவத்தை பற்றி பாடம் எடுக்க வேண்டும் எனவும் அப்பள்ளியின் முதல்வர் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது கண்டனங்களை தெரிவித்த பகுஜன் சமா கட்சி தலைவர் மாயாவதி “பல்லியாவில் அரசு பள்ளியில் தலித் மாணவர்களுக்கு தனி வரிசையில் உணவளிப்பது வருத்தம் அளிக்கிறது. இத்தகைய இழிவான சாதிய பாகுபாடு காட்டுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி எடுக்கப்படும் நடவடிக்கை சாதிய பாகுபாடு காட்டுபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்