டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் 5-பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
மதுபான கொள்கை வழக்கில், டெல்லி முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது, துணை நிலை ஆளுநர் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்பது உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகளால் அர்விந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்பார் என ஆம் ஆத்மி அறிவித்தது. இதையடுத்து டெல்லி துணைநிலை ஆளுநரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய அதே நாளில் அதிஷி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார்.
இந்த நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்று கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் கோபால் ராய், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். டெல்லியின் மிக இளம் வயது முதலமைச்சர் என்ற பெருமையை 43 வயதாகும் அதிஷி பெற்றுள்ளார்.