இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சியால் கோத்தபய ராஜபக்சே, அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
இவரது பதவி காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதையொட்டி நாடு முழுவதும் மொத்தம் 13,134 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் இன்று மாலை முடிவடைந்தது. தேர்தலில் 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படவுள்ளது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகி விடும் என்பதால் இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது நாளையே தெரிந்துவிடும்.
இலங்கை அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இவர்களை தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் தேர்தலில் களத்தில் உள்ளனர்.