அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவேன்: அதிஷி சபதம்..!

Mahendran

செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (15:27 IST)
அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவதே எங்கள் இலக்கு என்று, டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி சபதம் எடுத்துள்ளார்.
 
டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  இதையடுத்து, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று  ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதிஷி ஒருமனதாக டெல்லியின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 
எனவே அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை ஆளுநர் சக்சேனாவிடம் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் எனவும் இன்று மாலை அல்லது நாளை காலை அதிஷி முதல்வராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த புதிய சூழ்நிலையில், முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷி, செய்தியாளர்களை சந்தித்தபோது  கூறியதாவது:
 
"என்னை முதல்வராக தேர்ந்தெடுத்த எனது குரு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது மனமார்ந்த நன்றி. அவர் என்மீது நம்பிக்கை வைத்து, மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளார். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். வேறு எந்த கட்சியிலும் இருந்தால், தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பு கூட கிடைக்காமல் இருந்திருக்கும். ஆனால் கெஜ்ரிவால் என்னை நம்பி முதல்வர் பொறுப்பை வழங்கியுள்ளார். 
 
கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவிருப்பது எனக்கு பெரும் வருத்தம் அளிக்கிறது. எனது ஒரே குறிக்கோள், வரவிருக்கும் தேர்தலின் போது முதல்வராக தொடர்வது மட்டுமின்றி, அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவதே. இந்த பொறுப்பை ஏற்றுள்ள வரை, எனது ஒரே இலக்கு, கெஜ்ரிவால் வழிகாட்டுதலின்படி டெல்லி மக்களை பாதுகாத்து ஆட்சி நடத்துவதே" என அவர் உறுதியளித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்