செம்மரக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜாமின் மறுப்பு உள்ளிட்ட கடுமையான பல புதிய சட்டங்களை வனத்துறை அமல்படுத்தி உள்ளது.
செம்மரக் கடத்தலைக் கட்டுப்படுத்த புதிய வனத்துறை சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் பெருகி வரும் செம்மரக் கடத்தலைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் கடத்தலைக் கட்டுப்படுத்த காவல்துறையால் முடியவில்லை. அதனால் செம்மரக் கடத்தலில் கைது செய்யப்படுபவர்கள் மீது கடும் தண்டனை விதித்தால் மேற்கொண்டு அவர்களை கடத்தலில் ஈடுபடாமல் தடுக்க முடியும் என காவல் துறையினர் கருதினர்.
இதையடுத்து வனத்துறை சட்டம் 1967-ல் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்தப் புதிய சட்டப் பிரிவின்படி, இனி செம்மரக்கடத்தலில் முதல்முறை கைது செய்யப்படுபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 3லட்சம் முதல் ரூ. 10 லட்சம்வரை அபராதமும் விதிக்கப்படும். இரண்டாவது முறை கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இந்தச் சட்டப்பிரிவுக்கு முன் கைது செய்யப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இனி தற்போது செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவோருக்கு ஜாமீன் வழங்கப்பட மாட்டாது.
இந்த வழக்கை விசாரிக்க அப்பிலேட் டிரிபியுனல் தலைவர்களாக உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும்.
வனத்தின் பாதுகாப்புக்காக டி.எஸ்.பி. பொறுப்பில் உள்ள சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.