வேலூர் அருகே ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த கரு உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான கர்ப்பிணி, படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வயிற்றில் உள்ள நான்கு மாத கரு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று வரை குழந்தையின் இதயத்துடிப்பு இருந்ததாகவும், இன்று திடீரென நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் இறந்த குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கீழே தள்ளிவிட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை பயன்படுத்தி, அந்த இளைஞர் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.