வாய் தவறி பேசிவிட்டேன் : அமித்ஷா விளக்கம்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (13:53 IST)
எடியூரப்பா ஆட்சி ஊழல் செய்து விட்டதாக வாய் தவறி பேசிவிட்டேன் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

 
கர்நாடகாவில் வருகிற மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளது. அந்நிலையில் கர்நாடகாவிற்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக தெரிவித்தார். அப்போது, ஆவேசமாக பேசிய அவர் 'ஊழல் மலிந்த ஆட்சி எது என்ற போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும்” என்று கூறினார். 
 
அமித்ஷா பேச்சை கேட்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார். உடனே அமித்ஷா அருகில் இருந்த இன்னொரு தலைவர் அவருக்கு தவறை சுட்டுக் காட்டியவுடன் சுதாகரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக காங்கிரஸ் அரசுதான் என்று மாற்றி கூறினார்.
 
கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் பழமொழிகளை மாற்றி சொல்லி நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகி வரும் நிலையில், பாஜக தலைவரின் இந்த உளறலையும் நெட்டிசன்கள் வச்சு செஞ்சு வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி இன்று விளக்கம் அளித்துள்ள அமித்ஷா “ கர்நாடகா ஊழல் விவகாரத்தில் சித்தராமையாவிற்கு பதில் எடியூரப்பா பெயரை வாய் தவறி கூறி விட்டேன். நான் வாய் தவறி பேசியதால் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் தவறு செய்தாலும் கர்நாடக மக்கள் தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள் என ராகுலுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்