‘தாடி’ வைத்ததற்காக விமானப்படையில் இருந்து நீக்கியது சரி: இஸ்லாமியரின் மனு தள்ளுபடி

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (11:29 IST)
தாடி வைக்க தடை செய்வது என்பது மதச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

கடந்த 2008ஆம் ஆண்டு ‘தாடி’ வைத்திருந்த காரணத்திற்காக அன்சாரி அப்தப் அஹ்மத் என்பவர், விமானப்படையில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து அஹ்மத், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார்.

இஸ்லாமியன் என்ற அடிப்படையில் தாடி வைப்பதற்கு தனக்கு உரிமை உள்ளது என்றும், ஏற்கெனவே, மதச் சுதந்திரம் என்ற வகையில், சீக்கியர்கள் நீண்ட முடி வைக்கவும், தாடி வைக்கவும், டர்பன் வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இஸ்லாத்தைப் பொறுத்தவரை, தாடி வைப்பது என்பது அவரவர் விருப்பம்தானே தவிர, கட்டாயம் அல்ல; தாடியை எடுப்பவர்களை இஸ்லாம் தடை செய்வதும் இல்லை என்று விமானப்படை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

வியாழனன்று மீண்டும் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, விமானப்படையில், தாடி வைக்க தடை செய்வது என்பது மதச் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகாது என்று தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது.

மேலும், முப்படைகளில், விதிமுறைகள் என்பது ஒழுக்கம் மற்றும் சமநிலையை பின்பற்றவே கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள், உடைக் கட்டுப்பாடு விதிப்பது குற்றச்செயல் அல்ல என்றும் கூறி அஹ்மத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
 
அடுத்த கட்டுரையில்