பிகில்: திரைவிமர்சனம்

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (10:12 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மட்டுமின்றி பிரச்சனைகளையும் போராட்டங்களையும் சந்தித்து இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் எப்படி உள்ளது என்பதை தற்போது பார்ப்போம் 
 
ரவுடியாக இருக்கும் ராயப்பன் தனது மகனையும் ரவுடி பாதையில் அழைத்துச் செல்லக் கூடாது என்பதற்காக அவரை ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் ஆக பார்க்க ஆசைப்படுகிறார். தந்தையின் ஆசையை நிறைவேற்றி கால்பந்தாட்டத்தில் ஒரு வீரராக மாறும் மகன் மைக்கேல் மெடல்களையும் கோப்பைகளை கைப்பற்றி தனது ஊருக்கு பெருமை தேடி தருகிறார்.
 
இந்த நிலையில் திடீரென வில்லன்களால் ராயப்பன் கொல்லப்பட, ராயப்பன் ரவுடியிசத்தை கையிலெடுக்க வேண்டிய சந்தர்ப்பத்திற்கு மைக்கேல் தள்ளப்படுகிறார். அதன்பின் திடீரென பெண்கள் கால்பந்தாட்ட டீமுக்கு கோச்சாக மாறும் மைக்கேல், அந்த அணியை எப்படி வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்கிறார் என்பதுதான் மீதிக்கதை
 
ராயப்பன், மைக்கல் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். இரண்டுமே அவருக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ராயப்பன் கேரக்டரில் வித்தியாசமான குரலுடன் ஸ்டைலாகவும் நடித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும். மைக்கல் விஜய் வழக்கமான ஆக்சன் மட்டும் ரொமான்ஸில் கலக்குகிறார். அவ்வப்போது அவரது நக்கலும் இந்த படத்தில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது 
 
நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயின் என்படை தவிர அவருக்கு வேறு எந்தவிதமான ஒரு முக்கியத்துவமும் அவரது கேரக்டருக்கு இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.  இருப்பினும் ஒரு சில காட்சிகளில் மட்டும் அவரது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது 
 
இதைவிட ஒரு டம்மியான கேரக்டரை கதிருக்கு எந்த ஒரு இயக்குனரும் கொடுக்க முடியாது. பரியேறும் பெருமாள் படத்தில் உச்சத்திற்கு சென்ற கதிரை ஒரேடியாக கீழே தள்ளி உள்ளார் இயக்குனர் அட்லி 
 
யோகி பாபு மற்றும் விவேக் காமெடிகள் சிரிப்பை வரவழைப்பதற்கு பதில் வெறுப்பைத்தான் வரவழைக்கின்றன. ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் ஆகியோர்களும் காமெடி என்ற பெயரில் கூத்தடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் உருப்படியான விஷயம் கால்பந்து வீரர் வீராங்கனைகளின் தேர்வு. குறிப்பாக ரோபோ சங்கரின் மகள், இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா ஆகியோர்களின் கேரக்டர்களுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லி
 
இந்த படத்தின் மிகப்பெரிய பலவீனமாகக பார்க்கப்படுவது வில்லன் கேரக்டர்தான். ஜாக்கி ஷெராப் கேரக்டர் வில்லன் என்பதை முதல் காட்சியிலேயே நாம் புரிந்துகொள்ளலாம். அப்படி இருந்தும் அவரை இடைவேளை வரை நல்லவராக காண்பித்து பின்னர் திடீரென வில்லனாக காட்டுவது வெறுப்பைத்தான் வரவழைக்கிறது
 
 
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் வகையில் உள்ளன. குறிப்பாக சிங்கப் பெண்ணே பாடல் எழுந்து ஆட்டம் போட வைக்கிறது. இந்த பாடலின் ஒரு காட்சியில் ரஹ்மானும் அட்லியும் தோன்றுவது இதுவரை வெளிவராத ஒரு சஸ்பென்ஸ். அதேபோல் வெறித்தனம் பாடலுக்கு தியேட்டரே குலுங்குகிறது என்று சொல்லலாம். மேலும் பின்னணி இசையில் ஏஆர் ரஹ்மான் பட்டையை கிளப்பியுள்ளார்
 
ஒளிப்பதிவாளர் விஷ்ணு மற்றும் எடிட்டர் ரூபன் ஆகியோர் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர். இருப்பினும் இந்தப் படத்தின் கதைக்கு 3 மணி நேரம் என்பது மிகவும் அதிகம். கொஞ்சம் கூட யோசிக்காமல் முதல் பாதியில் அரைமணிநேர காட்சியை வெட்டினால் படம் நன்றாக இருக்கும் என்பதே படம் பார்த்து வெளியே வரும் அவர்களின் கருத்தாக உள்ளது 
 
இயக்குனர் அட்லி முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்காக மட்டுமே இந்த படத்தை இயக்கி உள்ளது போல் தெரிகிறது. பொதுவான ஆடியன்ஸ்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. எனவே தான் முதல் பாதியில் முழுக்க முழுக்க ஆக்சன், ரொமான்ஸ் மற்றும் மாஸ் காட்சிகளை வைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் அவ்வப்போது கதைக்கு வருகிறார். இரண்டாம் பாதியிலும் திரைக்கதை வலுவாக இல்லாததால் படம் முடிந்து வெளியே வரும் போது ஒரு நிறைவு கிடைக்கவில்லை
 
மொத்தத்தில் விஜய் ரசிகர்கள் மட்டும் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட படம்தான் பிகில்
 
2.25/5
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்