என் ஆளோட செருப்பக் காணோம் - திரைவிமர்சனம்

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (19:54 IST)
ஜெகன் நாத் இயக்கத்தில் ரிலீஸாகியுள்ள படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.


 

 
‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ‘பசங்க’ மற்றும் ‘கோலிசோடா’ படங்களில் நடித்த பாண்டி, ‘தமிழ்’ என்ற பெயரோடு ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, ரேகா, சிங்கம்புலி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ், பால சரவணன் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
இஷான் தேவ் பாடல்களுக்கு இசையமைக்க, தீபன் சக்கரவர்த்தி பின்னணி இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல் தயாரித்துள்ளார். காமெடி டிராமாவாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
 
ஆனந்தியை ஒருதலையாகக் காதலிக்கும் சிலரில் தமிழும் ஒருவர். ஒருநாள் பஸ் ஏறும்போது ஆனந்தியின் செருப்பு கீழே விழுந்து விடுகிறது. இதனால், இன்னொரு செருப்பையும் பஸ்ஸிலேயே கழட்டிவிட்டு விடுகிறார். அதேநேரம், சிரியாவில் இருக்கும் ஆனந்தியின் அப்பா தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். 
 
‘தொலைந்த செருப்புகளை ஒன்றாகப் பார்க்கும்போது உன் அப்பா திரும்பக் கிடைத்துவிடுவார்’ என்கிறார் குறி சொல்லும் பெண்மணி. ஆனந்தி செருப்பைத் தேட, அவருக்காக தமிழும் செருப்பைத் தேடி நாயாக அலைகிறார். அந்த செருப்பு கிடைத்ததா? ஆனந்தியின் அப்பா விடுவிக்கப்பட்டாரா? தமிழின் ஒருதலைக் காதல் என்னானது? என்பதுதான் படம்.
 
ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் தமிழ், தன்னுடைய கேரக்டரை அழகாகச் செய்திருக்கிறார். காதலிப்பவர்கள் என்னென்ன செய்வார்களோ, அனைத்தையும் செய்கிறார். தான் என்ன மாதிரியெல்லாம் ஆனந்திக்காக கஷ்டப்பட்டேன் என யோகிபாபுவிடம் விளக்கும் இடத்தில் உருக வைக்கிறார்.
 
ஆனந்தி, காலேஜ் படிக்கும் பெண்ணாக அழகாக இருக்கிறார். சின்னச் சின்ன அசைவுகள் மூலம் நம்மை வசீகரிக்கிறார். யோகிபாபுவின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. பல நடிகர்களை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
 
ஒளிப்பதிவு கவர்ந்த அளவுக்கு, பின்னணி இசையோ, பாடல்களோ கவரவில்லை. காதலுக்காக எது வேண்டுமானாலும் செய்யும் இளைஞர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். ஆனால், இப்போது இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்