பலூன் - திரைவிமர்சனம்!!

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (12:52 IST)
சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திகில் கலந்த காமெடி படம் பலூன். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளதுள்ளார். 
 
சினிமா இயக்குநராக விரும்பும் ஜெய், ஒரு பேய்க் கதையை தயாரிப்பதற்காக தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குனர்கள் யோகி பாபு, மனைவி அஞ்சலி ஆகியோருடன் ஊட்டிக்கு வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார்.
 
அங்குள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதை கேள்விப்பட்டு, அதை வைத்து ஒரு பேய் கதை எழுத முடிவு செய்கிறார். ஆனால், ஜெய் வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திர சம்பவங்கள் நடக்கின்றன. 
 
ஜெய்யின் அண்ணன் மகன் பப்புவிற்கு மட்டும் ஒரு குட்டி பெண் குழந்தை தெரிகிறது. அவன் அந்த குழந்தையுடன் விளையாட துவங்குகிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு பேய் பிடித்துக்கொள்கிறது. பிறகு அஞ்சலிக்கும் பேய் பிடிக்கிறது. அந்த பேய்க்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


 
காதல், சண்டை படங்களில் நடித்து வந்த ஜெய், முதல் முறையாக முழுநீள திகில் படத்தில் நடித்திருக்கிறார். வழக்கம் போல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவியாக வரும் அஞ்சலி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிளாஸ்பேக் காட்சியில் வரும் ஜனனி ஐயர் நடிப்பால் மனதில் பதிகிறார். யோகி பாபுவின் காமெடி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. 
 
படத்தின் துவக்கத்திலேயே அனபெல், இட், கான்ஜூரிங் ஆகிய படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கதைதான் இது என்பதை சொல்லி நன்றி தெரிவித்துவிடுகிறார் இயக்குநர். உண்மையை சொல்லிவிட்டோம் என்ற காரணத்திற்காக படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஹாலிவுட் பேய் படத்தின் சாயலி இருப்பது அதிருப்தி அளிக்கிறது. 
 
படம் துவங்கி ஒரு மணி நேரம் வரை, வீட்டிற்குள் இருப்பவர்களை பேய் பயமுறுத்தும் காட்சிகளே இடம்பெற்றிருப்பதால் சற்று சோர்வூட்டுகிறது. பிறகு சற்று சூடுபிடிக்கும் கதை, இடைவேளைக்கு பிறகு வரும் ஃப்ளாஷ் பேக் காட்சி மீண்டும் அலுப்பூட்டுகிறது.
 
காமெடி - திகில் படத்தை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். அதில் காமெடி பகுதிகள் சிறப்பாகவே அமைந்துவிட்டன. ஆனால், திகில்தான் போதுமானதாக இல்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்