ஃபிளாஷ்பேக்கை சொல்லி பிரச்சார மேடையில் கதறி அழுத நடிகை!!!

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (15:35 IST)
உத்திரபிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஜெயபிரதா தனது பிளாஷ்பேக்கை சொல்லி கதறி அழுதார்.
தன்னுடைய 14 வயதில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் நடிகை ஜெயபிரதா. ஆந்திராவை சேர்ந்த நடிகை ஜெயபிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தமிழில் சலங்கை ஒலி, மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், ஏழைஜாதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
நடிகை ஜெயபிரதா, 1994 ஆம் ஆண்டில் என்.டி.ராமாராவ் அவர்களுடைய தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பின்னர் அவரிடமிருந்து ஜெயபிரதா பிரிந்து சென்று, சந்திரபாபு நாயுடு பிரிவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் ராஜ்ய சபாவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவுடனான கருத்து வேற்றுமையால், அவர் தெலுங்கு தேசக் கட்சியை விட்டு வெளியேறி அசாம் கான் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அதன் பின்னர் கடந்த 2004 மற்றும் 2009 தேர்தலின்போது உத்திரப் பிரதேசத்தின் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பின்னர் சமாஜ்வாடியில் இருந்து பாஜகவில் இணைந்தார்.
 
இந்நிலையில் தாம் 2 முறை வெற்றிபெற்ற ராம்பூர் தொகுதியில் ஜெயபிரதா தற்போது பாஜக சார்பில் போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ராம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய அவர்  சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அசாம் கான் குண்டர்களை ஏவி தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் தமது முகத்தில் ஆசிட் வீசிவிடுவார்கள் என பயந்துதான் தான் ராம்பூரை விட்டுச் சென்றதாக கூறி கதறி அழுதார்.
 
உடனடியாக அங்கிருந்த பாஜக தொண்டர்கள் அவரை சமாதானப்படுத்தி உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் தைரியமாக இருங்கள் என கூறி அவரை ஆசுவாசப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்