தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் புன்னை நகரை சேர்ந்த பி. ராஜகோபால் 1981 ஆம் ஆண்டில் சென்னையில் சரவண பவன் எனும் பெயரில் ஹோட்டலை நிறுவினார். பின்னாளில் இந்த ஹோட்டல் பிரபலமாகி பல கிளைகள் தொடங்கப்பட்டது.
தூத்துக்குடிகாரர் என்பதால் ராஜகோபாலை அண்ணாச்சி என்று கூறுவார்கள். அண்ணாச்சிக்கு 2 மனைவிகள் உண்டு. அண்ணாச்சி தொழிலில் நல்ல வளர்ச்சி அடைந்து வந்த காலமது. இப்படி பேரும் புகழையும் சம்பாதித்த ராஜகோபால் ஒரு பெண் மீது ஏற்பட்ட மோகத்தால், சபலத்தால் ஒரு கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டார். அதன்விவரம் பின்வருமாறு...
அப்போது சரவணபவன் ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வந்தவரின் மகளான ஜீவஜோதி என்பவர் மீது ஆசைபட்ட அண்ணாச்சி அவரை அடைய நினைத்தார். இதற்கிடையே ஜீவஜோதி, தான் காதலித்து வந்த பிரின்ஸ் சாந்தகுமாரை கரம் பிடித்தார்.
ஜீவஜோதியின் மீதான தீராத மோகத்தால், அவர் திருமணமானவர் என்றும் பாராமல் அண்ணாச்சி பிரின்ஸ் சாந்தகுமாரை அழைத்து ஜீவஜோதியிடம் இருந்து விலகும்படி மிரட்டியுள்ளார். ஆனாலும் அண்ணாச்சியின் மிரட்டலுக்கு அவர் உடன்படவில்லை. இதனால் கோபம் தலைக்கேரிய அண்ணாச்சி கூலிப்படையை ஏவி கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி சாந்தகுமார் கடத்தி கொடைக்கானல் மலை உச்சியில் இருந்து தள்ளி கொலை செய்தார்.
இது சம்மந்தமான விசாரணையில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. 2009ல் சென்னை பூந்தமல்லி நீதிமன்றம்,ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜகோபால் சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் 2 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பிணையில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு அப்பீலுக்கு உயர் நீதிமன்றம் சென்றபோது அவருக்கு ஆயுள்தண்டனை கிடைத்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் அப்பீல் செய்திருந்தார். இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டையை உறுதி செய்ததோடு ஜூலை 7ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளது. காமத்திற்காக ஒரு குடும்பத்தையே சீரழித்த அண்ணாச்சி மீதமுள்ள வாழ்நாளை சிறையில் கழிக்க இருக்கிறார்.