தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிய திமுக.. போதைப்பொருள் விற்பனை.! விலைவாசி உயர்வு.! இபிஎஸ் காட்டம்...

Senthil Velan
திங்கள், 15 ஏப்ரல் 2024 (12:01 IST)
திமுக ஆட்சியில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் தமிழக மக்கள் படாத பாடு படுகின்றனர் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை  ஆதரித்து காந்தி சாலையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அண்ணாவின் கனவுகளை நினைவாக்கும் கட்சி அதிமுக தான் என்றார்.
 
மக்களை குடும்பமாக கருதுவதால் தான் மக்களுக்கான திட்டங்களை அதிமுக தீட்டியது என்றும் அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட குடிமராமத்து திட்டத்தால்தான் மழைக்காலத்தில் நீரை சேமித்து வைத்து கோடைகாலத்தில் பயன்படுத்த முடிந்தது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தியதால் தான் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது என்று அவர் கூறினார். பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் நெசவாளர்களை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய எடப்பாடி, பாஜக தேர்தல் அறிக்கையில் கைத்தறி தொடர்பான எந்த திட்டமும் இடம்பெறவில்லை என்றும் விமர்சித்தார்.
 
மேலும் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு தேவையான வசதிகள் எதையும் செய்து தரவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளில் மளிகை பொருட்கள், அரிசி ஆகியவற்றின் விலை உயர்ந்ததால் மக்கள் படாத பாடு படுகின்றனர் என்று எடப்பாடி வேதனை தெரிவித்தார். 

கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்ததால் மக்கள் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் சர்வசாதாரணமாக கஞ்சா விற்கப்படுகிறது என்றும் போதை பொருட்கள் புழக்கத்திற்கு திமுக அரசு தான் காரணம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

மேலும் திமுக ஆட்சியில் மின் கட்டணம், குடிநீர் வரி, சொத்து வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன என்றும் மூன்றாண்டு ஆட்சியில் திமுக தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது என்றும் எடப்பாடி சரமாரியாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்