ப சிதம்பரம் வீசிய கடைசி அஸ்திரம் - சிவகங்கைத் தொகுதி கிடைத்த பின்னணி !

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (11:48 IST)
சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பெயர் இழுபறியில் இறுதியாக ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையிலும் காங்கிரஸ் மட்டும் அறிவிக்காமல் தாமதம் காட்டியது.

ஒருவழியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த காங்கிரஸ் சிவகங்கை தொகுதியை மட்டும் விடுத்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. அதற்குக் காரணம் சிவகங்கை தொகுதியை தனது மகனுக்குக் கொடுக்கவேண்டுமென முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கொடுத்த அழுத்தமே. ஆனால் காங்கிரஸோ ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்குவது என்ற முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.இதனால் கார்த்திக் சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இடையே போட்டி நிலவுவதாக பேச்சு எழுகிறது.

இது ஒரு புறம் இருக்க கார்த்திக் சிதம்பரம் மீது நீதிமன்ற வழக்குகள் இழுபறியில் இருப்பதால் தான் காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடைசி நேரம் வரையிலும் சிவகங்கை தொகுதி சீட் யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் கார்த்திக் சிதம்பரத்திற்கு சிவகங்கைத் தொகுதி என அறிவித்தது காங்கிரஸ்.

காங்கிரஸின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் சிதம்பரத்தின் மிரட்டல் ஒன்று இருந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்போது காங்கிரஸின் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புப் பணியில் இருக்கும் சிதம்பரம் ‘ என் மகனுக்கு சீட் கொடுக்கவில்லையென்றால் நான் காங்கிரஸில் இருந்து விலகிக்கொள்கிறேன்’ என அதிரடியாக டெல்லி மேலிடத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இதனால் அதிர்ந்த டெல்லி மேலிடம் தேர்தல் நேரத்தில் இது மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என நினைத்து கார்த்திக்குக்கே சீட் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்